top of page

 

                 

                   'துறவின் வழி- பிரசன்ன மதி மாதாஜி'

 

- நைன் லைவ்ஸ் நூலிலிருந்து தமிழில்: ஷங்கர்

excerpts from தி ஹிந்து..16.01.2014

 

 

சங்கத்தில் சேர்ந்து இரு ஆண்டுகளுக்குப் பிறகு தீட்சை எடுத்துக் கொள்வதற்கு நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன். அந்த நவம்பர் மாதத்தில் முதல் முறையாக அவர்கள் எனது கூந்தலைப் பிடுங்கினர். துறவு வாழ்க்கை தொடர்பான நமது மன உறுதியையும், ஈடுபாட்டையும் பரிசோதிக்கும் முதல் சோதனை அது. உங்களது கூந்தல் பிடுங்கப்படும் வலியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாவிடில், அடுத்த படிநிலைக்கு நீங்கள் தயாராகவே இருக்க மாட்டீர்கள். அந்த நாள் நான் விரதம் அனுஷ்டித்தேன். அன்று மாலை எங்கள் மூத்த மாதாஜிக்களில் ஒருவர், பசுஞ்சாண சாம்பலை எனது தலையில் தடவினார். தலையில் காயம் ஏற்படும் போது, சீழ்பிடிக்காமல் இருப்பதற்கான இயற்கையான தடுப்பு மருந்து அது. அத்துடன் கேசத்தைப் பிடுங்கும்போது, கை வழுக்காமல் இருக்கவும் சாம்பல் உதவும். ...

 

முழுச்சடங்கும் முடிய கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆனது. மிகுந்த வலிமிக்க அனுபவமாகவும் இருந்தது. நான் அழக் கூடாது என்று நினைத்தாலும், அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் எனது பெற்றோர்களிடம் எனது முடிவைத் தெரிவிக்கவில்லை. அவர்கள் என்னை தடுத்து நிறுத்த முயற்சிப்பார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர்களுக்கு விஷயம் தெரிந்து வந்து சேர்வதற்குள் அந்தச் சடங்கும் முடிந்துவிட்டது. எனது மொட்டைத் தலையை காயங்கள் மற்றும் ரத்தம் வழியப் பார்த்தவுடன் எனது அம்மா, கதறி அழுதார். எனது அப்பாவுக்கு கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. துறவுப் பாதையிலிருந்து நான் இனி திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை என்று அவர்களுக்குப் புரிந்துவிட்டது. 

 

தீட்சை பெற்றபோது...

அந்தச் சமயத்தில் தான் நான் எனது பழைய தோழி ப்ரயோகமதியை சந்தித்தேன். ஒரு நாள் எங்களது சங்கம் அவளது கிராமத்திற்கு சென்றபோது, அவளது பணக்காரத் தந்தையார் எங்களை வரவேற்று அவரது பெரிய வீட்டில் தங்கவைத்தார். ப்ரயோகமதிக்கும் என்னைப் போலவே 15 வயதுதான். அழகான, மெலிந்த தேகமுள்ள, நுண்ணுணர்வு கொண்ட குட்டிப்பெண்ணாக இருந்தாள். எங்கள் அறைக்கு தினசரி வந்து பேசிச்செல்வாள். நாங்கள் திரும்பவும் அதிக நெருக்கமாகிவிட்டோம்.

 

இரவெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அவள் என்னைப் புரிந்துகொண்ட அளவுக்கு யாருமே புரிந்துகொண்டதே இல்லை. எனது நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களையும் அவள் அளவுக்கு பகிர்ந்துகொண்டவள் யாரும் இல்லை. வைர வியாபாரி ஒருவரின் மகனுடன் அவளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவள் என்னுடன் தீட்சை எடுக்க விரும்பினாள். அவளது பெற்றோர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

ஒருவாரம் கழித்து நாங்கள் அந்த கிராமத்தை விட்டு இன்னொரு ஊருக்குக் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டோம். அன்று மாலையே ப்ரயோகமதி தனது தாயிடமிருந்து சர்க்கஸ் பார்க்க வேண்டும் என்று சொல்லி, பணம் வாங்கிக் கொண்டாள். நள்ளிரவில் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்து, எங்கள் குரு மகராஜிடம், தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள். அவளது தந்தையும் சகோதரர்களும் எங்கள் இடத்திற்கு வந்து, அவளை விடச் சொல்லிக் கெஞ்சினார்கள். ஆனால் அவள் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டாள். அந்த கணத்திலிருந்து நாங்கள் 20 வருடங்கள் சேர்ந்து இருந்தோம். சேர்ந்து தீட்சை எடுத்தோம். சேர்ந்து பயணித்தோம். சேர்ந்துண்டோம். மழைப்பருவமான சதுர்மசா பருவத்தில் சேர்ந்து எங்கள் நேரத்தைக் கழித்தோம். சீக்கிரமே நாங்கள் நெருக்கம் ஆனோம்.

 

சதுர்மசா பருவத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் நீண்ட காலம் தங்குவதற்கு அனுமதி கிடையாது. ஒரு இடத்துடன் நாங்கள் பந்தம் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்பதே அதற்குக் காரணம். அதனால் பெரும்பாலான இரவுகளில் வெவ்வேறு இடங்களில் நாங்கள் தங்குவோம். எங்கள் வாழ்க்கையும் வண்ணமயமாக இருந்தது. சில இரவுகளில் செல்வந்தர்களின் வீட்டில் தங்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் பள்ளிகளில் தங்க நேரும். சில நேரம் தர்மசலாவில் தங்குவோம். குகைள் மற்றும் காடுகளில்கூடத் தங்கியிருக்கிறோம். சமணர்கள் எங்களை தங்கள் வீட்டில் உபசரிப்பதை கௌரவமாக நினைப்பார்கள். இந்துக்களும் தரிசனத்துக்காக வருவார்கள். 

 

மக்கள் எங்களது வாழ்க்கையை மிகவும் கடினமானது என்று எண்ணுகிறார்கள். ஆம், பல நேரங்களில் அது உண்மைதான். தெரியாத ஊர் ஒன்றில், ஒரு ரூபாய் கூட பையில் இன்றி செல்லும் போது, பணக்காரருக்கும் ஏழைக்கும் இடையிலான வித்தியாசங்களும், படித்தவருக்கும் பாமரருக்கும் இடையிலான இடைவெளி என்று அனைத்து பேதங்களும் மறைந்துவிடுகின்றன. அங்கே பொதுவான மனிதாபிமானம் மட்டுமே மேலெழுகிறது.

உடைமைகள் ஏதுமின்றி அலையும் வாழ்க்கை நமது ஆன் மாக்களுக்குக் கட்டற்ற சுதந்திரத்தை அளிக்கிறது. எதிர் வரும் ஒவ்வொரு நாளையும் அதன் இயல்பிலேயே அந்த உடைமையுணர்வோ, பளுவோ, சுமையோ இன்றி வாழ்வது என்பது அற்புதமான அனுபவம். இந்நிலையில் பயணமும் இலக்கும் ஒன்றாகவும், சிந்தனையும் செயலும் ஒன்றாகவும் ஆகும் பாதை இது. எந்த பந்தமோ, பிணைப்போ இன்றி முழுமையான விடுதலையுடன் நகரும் நதியைப் போல நாங்கள் பயணிக்கிறோம்....

//வில்லியம் டேல்ரிம்பில்.

Click on the image for a moving article on

'The nun's tale', in 'The hindu dt.01.11.2009

bottom of page